மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953 ), (மு. க. ஸ்டாலின்) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011வரை பொறுப்பு வகித்துள்ளார்.இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார்.

இவரது அண்ணன் மு.க. அழகிரியும், தங்கை கனிமொழியும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின்பொறுப்பு வகித்துள்ளார்.இவர் தமிழ் மொழியில் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பெயர் காரணம்:-

இவர் 1953 ஆம் ஆண்டு கருணாநிதி – தயாளு அம்மாள் ஆகியோரின் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். உருசியாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி.

குடும்ப அரசியல் வாழக்கை:-

தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார்.

மாநிலச் செயலாளர்:-

இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள சான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது . 1980 இல் திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின்:-

திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.

முதல் தேர்தல்:-

ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்.அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.

மேயர்:-

இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.

2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார்.ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.

அமைச்சர்:-

மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர்பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார்.

எதிர்க்கட்சித் தலைவர்:-

2016 சட்டமன்றத் தேர்தலின் போது, ​​ஸ்டாலின் இளைஞர்களைக் கவரும் விதமாக நமக்கு நாமே என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்கு சென்றார். அந்த தேர்தலில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியை வென்றார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டில், ஸ்டாலின் மற்றொரு நமக்கு நாமே சுற்றுப்பயணத்திற்கு சென்றார். பின்னர் 2018 ஆம் ஆண்டில், அவரது தந்தை கருணாநிதி மறைவுக்கு பின், ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார்.

முதல் வெற்றி:-

மு. க. ஸ்டாலின் தேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, மாநிலத்தில் 2019 பொதுத் தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 நாடாளுமன்ற இடங்களில் 39 இடங்களையும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 21 இல் 12 இடங்களையும் 52% வாக்குகளைப் பெற்று வென்றது. திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

அரசியல் படிகள் :-

சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.

அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளைவிட, திமுகவுக்குள்ளேயே வைகோவை சமாளிக்க ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என ஆதரவாளர்களால் கருதப்பட்டது.

ஒரு கட்டத்தில் வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னரே ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.2017 சனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.2018-இல் திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவிற்குப் பின் ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். 2019-இல் இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணித் தலைவர் ஆனார்.

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!