டிராபிக் ராமசாமி (பிறப்பு: ஏப்ரல் 1, 1934) (கே. ஆர். ராமசாமி) ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர் ஆவார். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம்.
இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்.
பெயர் காரணம்:
ஆரம்பத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரி முனையின் முன்னால் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்துவதில் உதவி செய்தார். ஆகவே காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் ”டிராஃபிக் ராமசாமி” என்று அழைக்கப்படுகிறார்] தமிழக சமூக ஆர்வலர்களின் முன்னோடி என்று போற்றப்படுபவர்.
பொதுநல சேவைகள்:
டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே. சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார்.
பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி.
தேர்தல் களம்:
2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2015 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பாளராக தனித்து நின்றார்.