மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜகவின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் என்.ரங்கசாமி அவர்கள் புதுச்சேரியில் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றார்.
முதலமைச்சர் என். ரங்கசாமி, நோய்த்தொற்றுக் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்து வருகின்ற இந்தச் சூழ்நிலையில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு புதுச்சேரி சட்டமன்றத்திற்கு அவசர அவசரமாக, தன்னிச்சையாக, தன் கட்சிக்காரர்களை மட்டுமே கொண்ட மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்திருப்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கையாகும்.
முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டணி கட்சியென்றும் பாராமல், என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களையே விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக இறங்கவும் வாய்ப்புள்ளது. சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பாஜக–வின் சதியை முறியடிக்க திமுக உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.