குஷ்புவை கைது செய்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகவும், மனுஸ்ருமிதி தொடர்பாக தரக்குறைவாக விமர்சித்ததாகவும் கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பாஜக மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும், இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா தரப்பில் அளித்த புகாரின் பேரில் திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சூழலில், திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாஜகவின் சார்பில் சிதம்பரத்தில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக, அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

குஷ்புவின் கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கிவிட்டு, பாஜகவின் போராட்டத்திற்கு தமிழக அரசு தடை செய்தத்துடன், தலைவர்களை கைது செய்துள்ளதாக, தமிழக பாஜக தலைவர் முருகன் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார், குஷ்பு கைது செய்யபப்ட்டது குறித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், “மக்கள் நிம்மதியாக வாழுவதற்கான சூழலை உருவாக்கித் தருவதே அரசினுடைய பணியாக இருக்க வேண்டும். அந்தக் கடமையில் இருந்து அரசு தவறக் கூடாது. எனவே தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காக குஷ்பு கைது செய்யப்பட்டார்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “விசிக தலைவர் திருமாவளவன் மீது புகார் அளிக்கப்பட்டு அதன் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி காவல் துறை தங்களது கடமையை செய்கிறது. அதற்குள் போராட்டம் நடத்துவது சரியல்ல. பாஜக மட்டுமல்ல எந்த கட்சியானாலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

Translate »
error: Content is protected !!