பாஜகவில் அண்மையில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் தர வேண்டுமா என, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாக, தகவல் கசிந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கேற்ப அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. மனுநீதி நூல் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளை பெரிதாக்கி, அதை அரசியலாக்கி பாஜக ஆதாயம் தேட முற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் களமிறங்கி, கைது செய்யப்பட்டு ஒரே நாளில் கட்சிக்குள் தனது வரவை குஷ்பு அதிரடியாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், குஷ்புவுக்கு தேவையற்ற முக்கியத்துவம் தரப்படுவதாக, மூத்த பாஜக தலைவர்கள் சிலர் முணுமுணுப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவின் முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட சில மூத்த தமிழக தலைவர்கள் உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் நிற்க சீட் கேட்ட சூழலில், அவர்கள் யாருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.
ஏற்கனவே ஓரடங்கட்டப்பட்டுவிட்டோமே என்று டெல்லி பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு, குஷ்பு போன்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது, இன்னும் எரிச்சலை ஏற்படுத்தி இருப்பதாக, கமலாலய வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு, தான் எப்போதும் ஒரு பெரியாரிஸ்ட் என்று கூறி அதிர்ச்சி வைத்தியம் தந்தார். பெரியார் பெண்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்தவர் என்பதால் அவருடைய கொள்கைகளைத் தான் பின்பற்றுவதாக குஷ்பு விளக்கம் அளித்தார்.
இந்த சூழலில், திருமாவளவனை எதிர்த்துப் போரட்டம் நடத்தப் புறப்பட்ட குஷ்பு கைது செய்யப்பட்டது, ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருப்பது, ஏற்கனவே, தலைமை மீது கடுப்பில் இருக்கும் மூத்த தலைவர்களுக்கு இது கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.