கடந்த ஆறு மாதங்களாக எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக இருப்பது ஏன் என்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குரு பூஜை விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மரியாதை செலுத்தினார். அவருடன் அமமுக முக்கிய நிர்வாகிகள், இதில் கலந்து கொண்டனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு டிடிவி தினகரனை பொதுவெளியில் சந்தித்ததால், தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பி அவரை வரவேற்றனர். வருங்கால முதல்வர் டிடிவி தினகரன் என்று கோஷம் எழுப்பினர்.
மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, டிடிவி தினகரன் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாகவே கடந்த ஆறு மாதங்களாக அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இல்லாமலும் அரசியல் செய்து வருகிறேன்.
இது குறித்து எனது கட்சியின் நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறேன். கொரோனாவால் நமக்கோ அல்லது பிறருக்கோ எந்த பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் கூட்டம் சேராதபடி செயல்படுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன் என்றார்.
—