சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் 19 வயதான மகன் தனுஷ் கடந்த 2019 – இல், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், 2 வருடமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாததால் இந்த ஆண்டு தேர்வு எழுத தயாராகி வந்தவர் தேர்வு பயம், விரக்தியால் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் பெரும் வேதனையளித்துள்ளது.
கொரோனாவால் சுமார் 2 ஆண்டுகள் மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்புக்குள்ளானதை சுட்டிக்காட்டி, மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் எனவும், தமிழக அரசிடம், நீட் தேர்வுக்கு விலக்குபெறும் நடவடிக்கையை தாமதமாக மேற்கொண்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனவும் கடந்த 06.08.2021 அன்று தெரிவித்திருந்தேன்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்த அரசு, சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பித்தவுடன் துரிதமாக தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், மாணவர்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும். பொதுத்தேர்வு ரத்து செய்த நிலையில், நீட் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்ற மத்திய அரசின் பிடிவாதத்தால், மாணவ, மாணவியர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த அவல நிலைகள் மாறவும், உயிரிழப்புகளை தவிர்க்கவும் மத்திய, மாநில அரசுகள் நீட் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தற்கொலை எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வல்ல என்பது சமூகத்திற்கு நான் தொடர்ந்து வழங்கிவரும் அறிவுரை. இறைவன் அருளால் உலகில் வாழ்வதற்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்பை, பெற்றோரையும், மற்றவர்களையும் வேதனைக்குள்ளாக்கி உலக வாழ்வை துறந்து செல்லும் விபரீத முடிவை எவரும் எடுப்பது ஏற்புடையதல்ல. தேர்வில் தோற்பது, வாழ்வில் தோற்பதாகாது என்பதை ஆசிரியர்கள் மாணவர்களிடம் அழுத்தமாக எடுத்துக்கூறி வாழ்வை வளமாக்கும் பல வழிகளையும் போதிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். மாணவன் தனுஷின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வுக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதை வரவேற்கிறேன் என்றார். மேலும் Better late than never நல்லது செய்ய வேண்டுமென முடிவெடுத்தால் அதை உடனடியாக செய்வது நல்லது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.