பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலியான ஹிந்துக்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் மகிளா காங்கிரஸ் நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களில் இருந்து காங்கிரஸ் சித்தாந்தம் முற்றிலும் வேறுபட்டு உள்ளதாகக் கூறினார். காங்கிரசைச் சேர்ந்தவராக தன்னால் மற்றவர்களின் சித்தாந்தங்களுடன் அனுசரித்துச் செல்ல முடியும் என்றும் பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
கடந்த 200 ஆண்டுகளில் இந்து மதத்தை முழுமையாக புரிந்து கொண்டு அதன்படி வாழ்ந்தவர் மகாத்மா காந்தியடிகள் எனத் தெரிவித்த அவர், ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியான கோட்சே அவரைக் கொன்றது முற்றிலும் முரணானது எனக் குறிப்பிட்டார். இந்துக்கள் எனக் கூறிக்கொண்டு நாடு முழுவதும் பெண்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்த ராகுல்காந்தி , பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் காரர்கள் ஹிந்துக்களே அல்ல என விமர்சித்தார்.