நகைப்பட்டறையில் 9 லட்சம் மதிப்புள்ள 56 சவரன் நகை திருடிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கீழ்பாக்கம் ராஜரத்தினம் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவர் அதே பகுதியில் சொந்தமாக கடந்த 10 ஆண்டுகளாக நகைப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தப்பன் ரூடி தாஸ் என்பவர் அருண் குமாரின் நகைப்பட்டறையில் நகை கட்டிங் வேலைக்கு சேர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அருண்குமார் கட்டிங் செய்வதற்காக 1236 கிராம் தங்கத்தை தப்பனிடம் கொடுத்தார். பின்னர் 16 ஆம் தேதி கொடுத்த நகையை வாங்க சென்ற போது தப்பன் காணாமல் போயிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்து நகையை பீரோவில் பார்த்த போது 56 சவரன் நகை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அருண்குமார் 9 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற ஊழியரான தப்பனை கைது செய்து நகையை மீட்டுதரக்கோரி கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.