ஜெய்பீம் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான சூர்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடிதமொன்றை எழுதியிருந்தார். அரசியல் சாசனத்தின் பெயரால் உறுதிமொழி ஏற்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகியுள்ள அன்புமணியின் அக்கடிதம் விமர்சனம் என்பதற்கும் அப்பால், அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை தமுஎகச ஏற்கவில்லை.
இதனிடையே அன்புமணியின் கடிதத்திற்கு சூர்யா எழுதிய பதிலில், எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் தனக்கோ படக்குழுவினருக்கோ இல்லை; சிலர் சுட்டிக்காட்டிய பிழையும் உடனடியாகத் திருத்தி சரிசெய்யப்பட்டுவிட்டது என விளக்கமளித்திருக்கிறார்.
இந்நிலையில், “ஜெய்பீம்: அன்புமணி Vs சூர்யா” என்ற தலைப்பிலான விவாதம் தந்தி தொலைக்காட்சியில் 12.11.2021 அன்று மாலை 8-9 மணிக்கு நடந்தது. இதில் பாமக சார்பில் பங்கேற்ற வழக்குரைஞர் பாலு, தொடக்கம் முதலே கருத்துரிமைக்கு எதிராக கடும் மிரட்டலை விடுத்ததுடன், தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பிற கருத்தாளர்கள் பேசும்போதும் குறுக்கீடு செய்து மிரட்டியபடியே இருந்தார். எனினும் அவரது மிரட்டலுக்கு அஞ்சாமல் பிற கருத்தாளர்கள் தமது நிலைப்பாடுகளை வெளிப்படையாக முன்வைத்தனர். ஆனால் விவாதம் முடிந்த நிமிடம் முதல் இப்போதுவரை தோழர் ஆதவன் தீட்சண்யாவினுடைய தொலைபேசி எண்ணுக்கு அறிமுகம் இல்லாத பலரும் அழைத்து தங்களை பா.ம.க.வினர் என கூறிக்கொண்டு அவரைத் தரக்குறைவாகப் பேசி வருகிறார்கள். ஆதவன் தீட்சண்யாவின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் படு கீழ்த்தரமான பதிவுகளை எழுதிவருகிறார்கள்.
கருத்துரிமைக்கு எதிரான இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டனம் செய்கிறோம். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத சக்திகள் இப்படி தனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவதை ஜனநாயகத்திலும் கருத்துரிமையிலும் நம்பிக்கைகொண்ட அனைவரும் கண்டனம் செய்யவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இது தொடருமேயானால் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் சங்கம் செல்லும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.