நளினி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுதலை செய்யும் தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக உள்துறை சார்பில் அதன் இணைச் செயலாளர் பத்மநாபன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி ஏற்கனவே தாக்கல் செய்த வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில்மனுவில், தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க தகுதியானவர் என கூறி, ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதை மத்திய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்ததும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளின்படி, நளினியின் மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

 

Translate »
error: Content is protected !!