ஜெயலலிதா மரணத்தில் ஆணையத்தின் விசாரணை முடிந்து விரைவில் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என அப்போலோ தரப்பில் வாதிடப்பட்டது.
ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணை ஆணையத்தில் நேர் நிற்க முடியாது என அப்போலோ நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறது எனவும், அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்பட வேண்டிய நிலையில், மீண்டும் மீண்டும் எங்கள் மருத்துவர்களையே விசாரிக்கிறார்கள் எனவும், விசாரணை ஆணையத்தில் மருத்துவ நிபுணர்கள் யாரும் இல்லை என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா மரணத்தில் ஆணையத்தின் விசாரணை முடிந்து விரைவில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என அப்போலோ தரப்பில் வாதிட்டனர். விசாரிக்க வேண்டிய சாட்சிகள் பட்டியலை வழங்க அப்போலோவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணை ஆணையம் நீதிமன்ற அறைபோல் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணை முடிந்ததும் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.