கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், சாமி தரிசனம் செய்ய தினசரி 45 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, கடந்த 15-ம் தேதி நடை திறக்கப்பட்டு, 16-ம் தேதி முதல் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள், தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். முன்பதிவு செய்யாமல் செல்லும் பக்தர்கள், நிலக்கல்லில் உள்ள ஸ்பாட் புக்கிங் மையங்கள் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 9-ம் தேதி முதல் மகரவிளக்கு தினமான 2022-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை, விர்ச்சுவல் க்யூ மூலம் தினசரி முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக அதிகரிக்க, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. அத்துடன் ஸ்பாட் புக்கிங் முன்பதிவு மூலம் தினசரி 5 ஆயிரம் பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.