நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்க உபரி நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு, நெய்வேலி என்எல்சி சுரங்க நீரை குடிநீராக மாற்றும் பணி துவங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் ‘பையோ மைனிங்’ முறைப்படி குப்பையை தரம் பிரித்து மக்கும் குப்பையை உரமாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.