வாரிசு அரசியல் பற்றிய அமித்ஷாவின் விமர்சனம், கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருப்பதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.
தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசுத் திட்டங்களை தொடங்கி வைத்தார். அரசு விழாவில் மரப்புக்கு மாறாக அரசியல் பேசிய அமிஷா, காங்கிரஸ் மற்றும் திமுகவை விமர்சனம் செய்தார்.
இந்தியா முழுதும் இப்போது குடும்ப அரசியலுக்கு நாம் தக்க பாடத்தைப் புகட்டி வருகிறோம். அதே பாடம் தமிழகத்தில் குடும்ப அரசியலைப் பின்பற்றும் கட்சிகளுக்கு புகட்டப்படும் என்று அமித்ஷா குறிப்பிட்டார்.
அமித்ஷாவின் விமர்சனத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு, இன்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திமுக வெற்றி மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதை நம்மைவிட அதிகமாக, ஆள்வோர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான், திமுக மீது அவதூறுகளைப் பரப்ப நினைக்கிறார்கள்.
நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை, உறவினர்களை, பினாமிகளைக் கொண்டு அரசு கஜானாவைச் சுரண்டி, நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் ஊழல் பற்றி பேசுகின்றனர்.
எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனத்தையும் அமித் ஷா வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது. நாட்டை நாசப்படுத்தி தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021 சட்டசபைத் தேர்தலில் வழங்குவார்கள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.