வாணியம்பாடி அருகே அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குச் சென்ற அமைச்சர் நிலோபர் கபீல், வழியில் சாலையோரம் குளிரில் நடுங்கிய மூதாட்டிக்கு சால்வை மற்றும் உணவு வழங்கி, அவரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல தன் உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
வாணியம்பாடி தாலுகா, ஆலங்காயம் பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (நவ. 22) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் வாணியம்பாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார்.
வாணியம்பாடி – ஆலங்காயம் பிரதான சாலை நிம்மியம்பட்டு அருகே சென்றபோது அங்கு சாலையோரம் மூதாட்டி ஒருவர் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார். இதைக்கண்ட அமைச்சர் நிலோபர் கபீல் தன் ஓட்டுநரிடம் காரை நிறுத்தக்கூறினார்.
பிறகு, காரை விட்டு கீழே இறங்கி வந்த அமைச்சர் நிலோபர் கபீல் அந்த மூதாட்டியிடம், “ஏன் சாலையோரம் அமர்ந்துள்ளீர்கள்? உங்கள் வீடு எங்கே?” எனக்கேட்டபோது, அந்த மூதாட்டி ஆதரவின்றி கடந்த ஒரு வாரமாக அந்த இடத்தில் இருப்பதை அறிந்தார்.
பிறகு மூதாட்டிக்கு தன் காரில் இருந்த சால்வை மற்றும் அவர் சாப்பிட வைத்திருந்த உணவை அந்த மூதாட்டிக்கு வழங்கினார் அமைச்சர் நிலோபர் கபீல். பிறகு, மூதாட்டியை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்சென்று ஒப்படைக்க தன் உதவியாளர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.