டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, காற்றின் தரம் ’மிக மோசம்’ என்ற நிலையிலேயே நீடிக்கிறது. டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு அதிகப்படியான வாகனங்களின் பயன்பாடு, கட்டுமான பணிகள் ஆகியவையே காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் அவ்வப்போது காற்றின் தரம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்தநிலையில் இன்று காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலையிலேயே நீடிப்பதாகவும், காற்றின் தரக்குறியீடு 353ஆக பதிவானதாகவும் சஃபார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, 21 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதென வடக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.