மருத்துவக்கல்லூரி கட்டண பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் சேர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
தமிழகத்தில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அனுமதிக்கான இடம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்களால் கல்வி கட்டணம் செலுத்த முடியாது என்பதால் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை ஏற்க மறுத்து இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் மருத்துவக்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முன்கூட்டியே தெரிவிக்காததால், பல மாணவர்களின் மருத்துவக்கனவு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்று ஆகிவிட்டது.
எனவே கல்வி கட்டணம் செலுத்தும் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு உதவிடும் வகையில் மீண்டும் கலந்தாய்வு நடத்தி அவர்கள் அனைவரும் மருத்துவக்கல்வியில் சேர வேண்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, திமுக எம்.எல்.ஏ.க்கள் சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் தமிழக முதல்வரின் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.