தமிழகத்தில் விலங்குகள் வேட்டையாடப்படுவது உள்ளிட்ட வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தமிழ்நாடு, கேரளா மாநில காவல் துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் சிபிஐ அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வனவிலங்குகள் சரணாலயங்களைப்பாதுகாப்பது தொடர்பாகவும், யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்குகளை, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு விசாரித்து வருகிறது.யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வேட்டை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
தற்போது வனக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ கண்காணிப்பாளர் நிர்மலா தேவி விசாரித்து வருவதாக கூறிய நீதிபதிகள், தமிழ்நாடு – கேரளா மாநில காவல் துறை, வனத்துறை அதிகாரிகள் மற்றும் சிபிஐ அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர். சிறப்பு புலனாய்வு பிரிவில் இடம்பெற உள்ள அதிகாரிகளின் பெயர்களை தெரிவிக்க, இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.