புயல் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஸ்டாலின் ஆறுதல்

சென்னையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

சென்னை கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், துறைமுகம், எழும்பூர் ஆகிய தொகுதிகளுக்கு நேரில் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், நிவர் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேற்று சந்தித்தார்.

அதேபோல் இன்று, ராயபுரம், ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளீல் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன், பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

இதன் பின்னர், ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட போது, கடந்த கால புயல் மற்றும் டிசம்பர் 2015 பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று பொதுமக்கள் கூறியதை கேட்க முடிந்தது.

கணக்கு காட்டுவதற்காகத் தூர் வாராமல் மழைநீர்க் கால்வாய்களை ஒழுங்காகத் தூர் வாரியிருந்தால் கூட சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்திருக்க முடியும். பெருவெள்ளத்தைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் செவிமடுத்து, அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

நிவர் புயலால் பல மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கால்நடைகள் சேதம், வீடு இடிந்து விழுந்து சேதம் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளது. மீனவர்களின் படகுகள், விவசாயிகளின் விளைபயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து – இழப்புக்குள்ளாகியுள்ள அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக 5000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Translate »
error: Content is protected !!