சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுவதையொட்டி, செஸ் விளையாட்டு போட்டி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்தவும் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை தொடர்ந்து, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்படும் எனவும், இந்த திட்டம் ஒரு கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதனை செயல்படுத்தும் வகையில், அதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, மாணவர்களிடையே சதுரங்க போட்டி முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதோடு, அதை முன்னிட்டு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் செஸ் போட்டி குறித்த புத்தாக்க பயிற்சி அளித்து சதுரங்க போட்டியின் விதிமுறைகள் மற்றும் விளையாட்டு நுட்பங்கள் மாணவர்களை சென்றடையவும் திட்டமிடப்பட்டுள்ளது..
மேலும், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 4 பிரிவுகளாக பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளதோடு, மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் 9 முதல் 12ம் வகுப்பு வரை 38 மாவட்டங்களிலிருந்து 152 மாணவர்,152 மாணவியர் என 304 மாணவ மாணவியர் சர்வதேச போட்டிகளை பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும், 6 முதல் 8ம் வகுப்பு வரை மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியர் 152 பேர் சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படுவதோடு, வெற்றி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.