சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் என்பது கேள்வி குறியாக இருக்கிறது.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசுப் பொது மருத்துவமனை ஆகும். சிறந்த சேவைக்காக தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இங்கு,
தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சென்னை தவிர அண்டை மாநிலங்கள், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
மருத்துவமனையில், பொது மருத்துவம், சிறுநீரக நோய்கள் , இதய நோய்கள், மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் , காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய், நாளமில்லாச் சுரப்பிகள் சார்ந்த கோளாறுள், எலும்பு நோய்கள், ரத்தநாளங்கள், நரம்பு நோய்கள், இரைப்பை மற்றும் குடல் நோய்கள், முதியவர்களுக்கான சிகிச்சைகள், கல்லீரல், சர்க்கரைநோய், நெஞ்சக நோய்கள்… என அனைத்துப் பிரச்னைகளுக்கும் மருத்துவச் சிகிச்சைக்காகவும், அறுவைசிகிச்சைக்காகவும் தனித்தனிப் பிரிவுகள் இருக்கின்றன. மேலும், ரத்த நோய்கள், பாலியல் தொடர்பான பிரச்னைகள், சரும நோய்கள், மனநலப் பிரச்னைகள் ஆகியவற்றுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கத் தனிப் பிரிவுகள் உள்ளன.
கதிரியக்கச் சிகிச்சை, நுண்வழி அறுவைசிகிச்சை, மயக்கவியல் துறை என இங்கே இல்லாத பிரிவுகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு அத்தனை வசதிகளையும், அனுபவம் வாய்ந்த மருத்துவர்களையும் கொண்டிருக்கிறது ராஜீவ் காந்தி மருத்துவமனை.
ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகம் தான் மிக பெரியதாகும். 123 அடி நீளத்திலும், 29 அடி அகலத்திலும் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை சாப்பிடலாம்.
இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்தநிலையில், அம்மா உணவகத்தில் அடிப்படை வசதிகள் கேள்வி குறியாக உள்ளது. அம்மா உணவகத்திற்கு நாளொன்றுக்கு காலை, மாலை, இரவு என மூன்று வேலையும் சேர்த்து ஆயிரம் பேர் வருகிறார்கள்.
காலையில், இட்லி , பொங்கல் மதியம் சாம்பார் சாதம், லமன் சாதம், தயிர் சாதம், இரவு நேரத்தில் சாப்பாத்தி வழங்கப்படுகிறது. ஆனால், ஒரு சில நேரங்களில் சாப்பாத்தி மாவு தட்டுபாடு ஏற்படுவதால், உணவருந்த வரும் பொதுமக்கள், அம்மா உணவகத்தில் வேலை செய்யும் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மேலும், சமையல் அறையில் சாப்பாத்தி கல்லு பழுதடைந்து உள்ளது. சமையல் அடுப்பு பழுதடைந்துள்ளது. இதனால், அங்கு பணிபுரியும் பெண்கள் கடுமையாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது, உணவகத்தில் 18 பெண்கள் வேலை செய்கின்றனர். வேலைக்கு இன்னும் ஆள்கள் தேவைப்படுவதாகவும், சம்பளத்தை தமிழக அரசு உயர்த்தி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு, உணவருந்தும் சாப்பாடு தட்டு தள்ளி செல்லும் வண்டி டயர் பழுதடைந்துள்ளது. அதனால், வண்டியின் டயரை கயிறு கொண்டு கட்டியுள்ளனர். அம்மா உணவகத்தின் சமையலறைக்கு வெளியே பெருச்சாளி இறந்து கிடக்கிறது.அதன்மீது ஈக்கள் மொய்கிறது. இதனால், கடுமையான தூற்நாற்றம் வீசுகிறது. மேலும், அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் சாப்பிடும் மேஜை பழுதடைந்து காட்சிபொருளாக கிடக்கிறது. உணவகத்திற்கு வரும் குடிநீர் மெட்ரா லாரி மூலம் வருகிறது.
அம்மா உணவகம் அருகே உள்ள கட்டிடத்தில் அதற்கான வாட்டர் டேங்க் 4 உள்ளது. அதற்கு ஒன்றிக்கு கூட மூடி இல்லை. மேலும், பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்கு வரும் தண்ணீர் சுகாதரமில்லாமல் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. வாட்டர் டேங்க் சுத்தம் செய்து பல மாதங்கள் ஆவதாக அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அம்மா உணவகத்தில் கிடைக்கும் குடிநீரை குடித்து நோயாளிகளாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.