தகுதிவாய்ந்த கைதிகள் இல்லாததால் தமிழகத்தில் திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு கைதிகளின் வருகை குறைந்துவிட்டது. இதனால் விவசாயம் செய்ய போதிய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சேலம் ஜாகீர்அம்மாப்பாளையம் திறந்தவெளி சிறையில் கைதிகள் விவசாயத்தில் அசத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்பட 136 சிறைகள் உள்ளன. இங்கு 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் இருக்கிறார்கள். இவர்களில் விடுதலையாகி செல்ல தயாராக இருக்கும் கைதிகளை சகஜ நிலைக்கு கொண்டு வந்து அவர்களை மக்களோடு மக்களாக வாழ வழிவகுக்கும் வகையில், திறந்த வெளிச்சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் கோவை சிங்காநல்லூரிலும், சேலம் ஜாகீர்அம்மாப்பாளையத்திலும் கடந்த 1962ம் ஆண்டு திறந்த வெளிச்சிறைச்சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு சிவகங்கையில் புருசடைஉடைப்பு பகுதியில் கொண்டு வரப்பட்டது. இச்சிறைக்கு கைதிகள் வருவதற்கு தொடக்கத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினர். இங்கு சென்று ஒரு நாள் வேலை பார்த்தால் ஒரு நாள் தண்டனை குறையும் என்பதால் கடும்போட்டி ஏற்பட்டது. குறிப்பாக ஒருவர் 5 ஆண்டு தண்டனை பெற்றிருந்தால், இச்சிறைக்கு வந்து பணியாற்றும் நேரத்தில் இரண்டரை ஆண்டாக குறைந்துவிடும். பின்னர் அவர் விடுதலையாகி சென்றுவிடுவார்.
இதையடுத்து இச்சிறைக்கு வருவதற்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், வரதட்சணை கொடுமை, வன்கொடுமை போன்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் இச்சிறைக்கு வரமுடியாது. சாதாரண குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே தகுதிவாய்ந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் சிறையில் அவர்கள் நன்னடத்தையுடன் இருந்திருக்க வேண்டும். குடும்பமும் விவசாயத்தை பின்புலமாக கொண்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு தகுதி கொண்டவர்கள்தான் விடுதலையாகி வெளியே செல்லும்போது விவசாய தொழிலை செய்வார்கள் என்ற நோக்கத்தில் இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது.
இவர்களை சிறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து திறந்தவெளி சிறைக்கு அனுப்புவார்கள். கோவை சிங்காநல்லூரில் 100 கைதிகளையும், புருசடைஉடைப்பில் 150 கைதிகளையும், சேலத்தில் 10 கைதிகளையும் வைக்கலாம். இச்சிறைகளுக்கு மத்திய சிறைகளில் இருந்தும் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதனால் இச்சிறைகளில் விவசாயம் உற்பத்தி அதிகரித்தது.
மாடு, ஆடு, கோழி வளர்ப்பு, தென்னை மரம் வளர்ப்பு, செக்கில் எண்ணை தயாரித்தல் போன்றவையும், அந்தந்த மத்திய சிறைகளுக்கு தேவையான காய்கறிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சமீபகாலமாக ஒவ்வொரு மத்திய சிறையிலும் திறந்தவெளிச்சிறைகள் கொண்டு வரப்பட்டு, கைதிகள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
இந்த திறந்த வெளிச்சிறைக்கு வரும் கைதிகளுக்கு தப்பிச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. இயற்கையான காற்றை சுவாசித்துக்கொண்டு ஆர அமர வேலை செய்கிறார்கள். இவர்களை கண்காணிப்பதற்காக சிறை வார்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் இப்போது அதிகாரப்பூர்வமான 3 திறந்தவெளிச்சிறைகளுக்கும் தகுதியான கைதிகள் இல்லை. சிங்காநல்லூரில் 13 கைதிகளும், புருசடைஉடைப்பில் 15 கைதிகளும், சேலம் ஜாகீர் அம்மாப்பாளையத்தில் 9 கைதிகளுமே உள்ளனர். இதனால் இங்கு உற்பத்தி குறைந்துவிட்டது.
அதே நேரத்தில் கைதிகளை ஆய்வு செய்வதற்கான அதிகாரிகள் கூட்டமும் கூடுவதில்லை எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில் சேலம் ஜாகீர்அம்மாபாளையத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் கைதிகள் விவசாயத்தில் அசத்தி வருகின்றனர். பத்தரை ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த சிறையில் 9 தண்டனை கைதிகள் விவசாயம் செய்து வருகின்றனர். முள்ளங்கி, தக்காளி, வெண்டை, வாழை, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், கீரை, கத்திரிக்காய் போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் பசு மற்றும் காளை மாடுகளும் வளர்க்கப்பட்டு வருகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் காற்கறிகள் மத்திய சிறைகளில் உள்ள கைதிகளின் சமையலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு சுமார் 3 டன் காய்கறிகள் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதே போல தினமும் 15 லிட்டர் பால் கரக்கப்பட்டு, கைதிகளுக்கு கொண்டு செல்கிறார்கள். 2 கிணறுகள் தண்ணீர் வற்றாமல் இருப்பதால் விவசாயத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
சேலம் மத்திய சிறையின் சூப்பிரெண்ட் கிருஷ்ணகுமார் நேற்று திறந்தவெளி சிறைச்சாலையை நேரில் பார்வையிட்டார். அப்போது, சிறையில் விவசாயம் சிறப்பாக செய்வதாகவும் இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் மத்திய சிறையில் உள்ள கைதிகளின் சமையலுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், ஒரு மாதம் அளவில் கணக்கிட்டால் 2டன் காய்கறிகள் கைதிகளின் உணவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் மேலும் மஞ்சள் விவசாயம் செய்ய இருப்பதாகவும் கூறினார்.
அதே நேரத்தில் திறந்தவெளி சிறைக்கு கைதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்காநல்லூரில் 13 கைதிகளும், புருசடைஉடைப்பில் 15 கைதிகளும், சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் 9 கைதிகளும் உள்ளனர்.
சேலம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து மாதம் ஒன்றுக்கு சுமார் 3 டன் காய்கறிகள் சிறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. திறந்தவெளி சிறையில் உற்பத்திச்செய்யப்பட்டு வரும் காய்கறிகளில் மோசடி நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதற்காக காய்கறிகளை பறிக்கும் இடத்தில் எடை போட வேண்டும், சிறைக்கு கொண்டு வரும்போதும் எடை போட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.