தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு மதிப்பிட, வரும் 1ம் தேதி மத்தியக்குழு வருகை தரவுள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், கடந்த 26ம் தேதி கரையை கடந்தது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி பலத்த மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த காற்று மற்றும் மழையால் பொருட்சேதம் ஏற்பட்டது.
புயல் கரையை கடந்து சில மணி நேரத்துக்குள்ளாகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட்டதால், விரைவில் இயல்பு நிலை திரும்பியது. அதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 26ம் தேதி மதியம் கடலூருக்கு புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். அத்துடன், ‘நிவர்’ புயல் தாக்குதலில் உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிடார்.
இந்நிலையில், தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு தமிழகம் வருகிறது. நவம்பர் 30ம் தேதியே தமிழகம் வரும் மத்தியக்குழு, டிசம்பர் 1-ம் தேதி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறது. புதுச்சேரி மாநிலத்திலும் மத்தியக்குழு ஆய்வு செய்யும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அசுதோஸ் அக்னிகோத்ரி தலைமையிலான இக்குழுவில், மத்திய வேளாண் அமைச்சக அதிகாரி, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரி, மத்திய நிதித்துறை அதிகாரி, மத்திய மின்சாரத்துறை அதிகாரி மத்திய ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி, மீன்வளத்துறை அதிகாரி, நீர் வளத்துறை அதிகாரி என, 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.