சமஸ்கிருதத்தை திணிப்பதா? அரசின் ஆணவப்போக்கு அழியும்: மு.க. ஸ்டாலின் கண்டனம்

வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக திணிக்க மத்திய அரசு முற்படுவது பகிரங்கப் பண்பாட்டுப் படையெடுப்பாகும்; அரசின் இந்த ஆணவப் போக்கு கண்டனத்திற்குரியது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாள்தோறும் சமஸ்கிருத செய்தித் தொகுப்பை தூதர்தஷன் பொதிகைத் தொலைக்காட்சியிலும், பிற மாநில மொழித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப மத்திய அரசு உத்தரவிடப்பட்டிருப்பது, மொழி ஆதிக்கத்தின் ஒளி – ஒலி வடிவமாகும்.

தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளுக்கான தூர்தர்ஷன் அலைவரிசையில் அந்தந்த மாநிலச் செய்திகள் அம்மாநில மக்களின் தாய்மொழியில் ஒளிபரப்பாகின்றன. தேசிய அளவிலான செய்திகள் ஆங்கிலத்தில் விரிவாக ஒளிபரப்பாகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் 15 ஆயிரம் பேர் அளவிற்கே பேசப்படும் ‘உலக வழக்கழிந்த’ சமஸ்கிருத மொழியிலான செய்தி அறிக்கையை 8 கோடிக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களிடமும், அதுபோலவே பல கோடி அளவிலான இந்தியாவின் பிற மொழி பேசும் மக்களிடமும் திட்டமிட்டுத் திணிப்பது, அவரவர் தாய்மொழி மீது – மொழி சார்ந்த தேசிய இனத்தின் மீது, தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்ற பகிரங்கப் பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாடு எனும் ஆலமரத்தை, இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு எனும் கோடரி கொண்டு பிளக்கும் பிற்போக்கான செயல்பாட்டை இனியாவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

சமஸ்கிருதத் திணிப்பைத் திரும்பப் பெறாவிட்டால் உடையப்போவது தொலைக்காட்சிப் பெட்டிகள் அல்ல; தாய்மொழியை உயிரெனக் கருதும் மக்களின் பங்கேற்புடன், மத்தியில் ஆட்சி செய்வோரின் ஆணவப் போக்கும் – அதிகார மமதையும்தான் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!