வேளாண் சட்டங்களை எதிர்த்து திருச்சியில் ரயில் மறியல் போராட்டம் – 200 மேற்பட்டோர் கைது

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மனித நேய மக்கள் கட்சியினர் அறிவித்தனர்.அதன் காரணமாக இன்று மதியம் முதலே கோட்டை ரயில் நிலையம் முழுவதுமாக தமிழ்நாடு காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் 100 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இருந்து ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலிருந்து மாற்று பாதை வழியாக அக்கட்சியினர் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் ரயில் தண்டவாளத்தில் புகுந்து அங்கு முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை கைது செய்வதற்காக நடைமேடையில் ஏற்றி அழைத்து வந்தனர்.அவர்கள் நடைமேடையில் நடந்து வந்து கொண்டிருந்த போது மயிலாடுதுறையிலிருந்து திருச்சி வழியாக கோவை செல்ல கூடிய ஜன சதாப்தி விரைவு ரயில் கோட்டை ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கண் இமைக்கும் நேரத்திற்குள்ளாக தண்டவாளத்தில் குதித்து ரயிலை மறித்தனர்.அதனை அடுத்து சுமார் 10 நிமிடங்கள் அந்த ரயிலை மறித்து முழக்கங்களை எழுப்பினர்.காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேரை   காவல் துறையினர் கைது செய்தனர்.ரயில் மறியல் காரணமாக சுமார் பத்து நிமிடங்கள் ரயில் தாமதமாக புறப்பட்டது.போராட்டத்தினால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Translate »
error: Content is protected !!