வேளாண் சட்டங்களை செயல்படுத்திப் பார்த்துவிட்டு அது பயனளிக்கவில்லை எனில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் 30-வது நாளாக இன்று போராடி வருகின்றனர்.
சுமார் 40 அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு மாதமாக நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்த சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிவுற்றன. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லி துவாரகாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாது என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “வேளாண் சட்டங்களை ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேலாக செயல்படுத்தி பார்க்கலாம்.
விவசாயிகளுக்கு அது பயனளிக்கவில்லை எனில், தேவையான திருத்தங்களை மேற்கொள்ள நாங்கள் தயாராக இருப்போம்” என்று கூறினார். பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று அரசு நம்புவதாகவும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.