காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி கட்சியில் அதிரடியான மாற்றம் செய்வது குறித்து மீண்டும் ஆலோசனை

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார்.

சமீப காலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், மூத்த தலைவர்கள் 27 பேர் அதிருப்தி அடைந்து கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். அதில் கட்சியில் அதிரடியான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும், முழுநேர தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ந் தேதி அதிருப்தி தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இதில் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரும் பங்கேற்றனர்.
5
மணி நேரத்துக்கு மேலாக இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மறு சீரமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. ராகுல்காந்தி மீண்டும் தலைவராக அனைத்து தலைவர்களும் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே நடத்தப்பட்ட ஆலோசனையின் தொடர்ச்சியாக இந்த கூட்டம் மீண்டும் நடத்தப்படுகிறது. விரைவில் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசிக்கிறார். கட்சியில் அதிரடியான மாற்றம் செய்வது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக சோனியாவுக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவில் உள்ள கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோர் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தை 2-க்கும் மேற்பட்ட முறை சந்தித்து விவாதித்தனர். கட்சியின் மறு சீரமைப்புப் பற்றி அவரிடம் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சோனியாகாந்தி மூத்த தலைவர்களை சந்திக்கிறார். இந்த கூட்டத்தில் அமைப்பு தேர்தல் தொடர்பாகவும், கட்சியின் புதிய தலைவர் தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!