கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கே.பி.சர்மா ஒலி வெளியேற்றம்

காத்மண்டு,

நேபாளத்தின் இடைக்கால பிரதமர் கே.பி.சர்மா ஒலி கட்சியின் மத்திய குழு கூட்டத்தால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நேற்றிரவு நீக்கப்பட்டார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, கே.பி.சர்மா ஒலி தலைமையில் 2017 பொதுத் தேர்தலின் போது பெரும்பான்மையைப் பெற்று நேபாளத்தில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் சமீப காலமாக தனது சொந்த கட்சிக்குள்ளேயே ஒரு தரப்பினர் போர்கொடி உயர்த்தியதால், ஆதரவை இழந்து வருகிறார் சர்மா ஒலி.

இதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 20 ந்தேதி ஆட்சியை கலைத்து விட்டு, ஏப்ரல் மே மாதங்களில் தேர்தல் மூலம் ஆட்சியை பிடிக்க முடிவெடுத்தார் சர்மா ஒலி. அதன் காரணமாக இப்போது இடைக்கால பிரதமராக சர்மா ஒலி நீடித்து வருகிறார்.

சொந்த கட்சியிலேயே ஒரு பிரிவினரால், தொற்றுநோயை தவறாகக் கையாண்டதற்காகவும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்களைக் காப்பாற்றுவதற்காகவும் அவர் பரவலாக விமர்சிக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக நேபாள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சர்மா ஒலி மற்றும் பிரச்சந்தா இடையே மோதல் வலுத்து வந்த நிலையில், கீழ் சபையை கலைக்க சர்மா ஒலி எடுத்த முடிவு பொதுமக்களையும் அவரது கட்சியினரையும் கோபப்படுத்தியது.

நேபாள நாடாளுமன்றத்தின் கீழ் சபை கலைக்கப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஒரு டஜன் ரிட் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை தலைமை நீதிபதி சோலேந்திர ஷம்ஷர் ராணா தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் பிரச்சந்தா கட்டுப்பாட்டில் இருக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து, பிரதமர் சர்மா ஒலியின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயண் காஜி ஸ்ரேஸ்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, சர்மா ஒலி தனது ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய கட்சியை தோற்றுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!