டெல்லியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான நேற்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 83 போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வன்முறை தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வன்முறையின் போது 17 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து டெல்லியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவை டெல்லி போலீசார் பிறப்பித்துள்ளனர்.
இதனிடையே டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும் டெல்லி எல்லையில் கூடி, அமைதியாக தொடர்ந்து போராட்டம் நடத்துமாறு விவசாயிகள் போராட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. வன்முறை காரணமாக டிராக்டர் பேரணி ரத்து செய்யப்படுவதாகவும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு தொடர்பாக, டெல்லி காவல்துறை நான்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.