மெரினாவில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் அலையில் சிக்கி பலி

சென்னை மெரினா கடலில் குளிக்கச் சென்ற தனியார் கல்லூரி மாணவன் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடல் பகுதியில் தனியார் கல்லூரி மாணவர்கள் 10 பேர் இன்று காலை குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவர் கடல் அலையின் சுழலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மணலில் சிக்கி கொண்டுள்ளார். பின்னர் மீனவர்கள் உதவியுடன் அந்த மாணவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டுவந்த நிலையில், மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக மெரினா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த மாணவன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயின் என்பதும், காட்டாங்களத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கி வந்த நிலையில், இன்று காலை நண்பர்களுடன் மெரினா கடலில் குளிக்க வந்தபோது அலையில் சிக்கி உயிரிழந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!