தலைநகர் டெல்லியில் இன்று காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் அதிகளவிலான வாகன இயக்கம், தொழிற்சாலைகள், விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காற்று மாசுவால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிரமம் நிலவி வருகின்றது. தொடர்ந்து 2 நாள்களாக ‘மோசம்’ என்ற பிரிவில் இருந்த நிலையில் இன்றும் ‘மோசம்'(293) என்ற பிரிவுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து பள்ளிகள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.