கிருஷ்ணரை பற்றிய கருத்துக்கு அகிலேஷ் யாதவ் மன்னிப்பு கோர வேண்டும் என உத்தரபிரதேச துணை முதல்வர் கே.பி மவுரியா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் அனல்பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உ.பியில் தனது தலைமையிலான ராமராஜ்யம் அமைய போவதாக கிருஷ்ணர் கனவில் வந்து தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் மவுரியா, அகிலேஷின் கிருஷ்ணர் பற்றிய கருத்து மக்கள் மனதை புன்படுத்தியுள்ளதாகவும், இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அக்கட்சி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை எனவும் அவர் கூறினார்.