தமிழ்நாட்டில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் புவியரசன்,
தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கின்றது, இதனால் கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுசேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு, நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.