தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர் ரயில் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளாதா என நாளை தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டுமெனவும், அனுமதி பெற்ற சிலைகளை தலைவர்களின் சிலை பூங்கா அமைத்து பராமரிக்கவும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த ஏ.திருமுருக தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், திருப்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியில் திமுக-வின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் சிலை வைக்க திட்டமிடப்படுவதாகவும், இது நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது என எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த வழக்குடன் இணைத்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில் வைக்க யாரும் முடிவெடுத்துள்ளார்களா, சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா என தமிழக உள்துறை செயலாளர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நாளை விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!