புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, குருசுகுப்பம் அரசுப் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தினார்.
புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பழமையான கட்டடம் பழுது காரணமாக, அங்கு படித்து வரும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள், புதுச்சேரி குருசுகுப்பம் கிருஷ்ணராசலு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இரண்டு பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டதால் ஒரு சில ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதற்கு கிருஷ்ணராசு அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி மாணவிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வித் துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் சுகுமாரன், “பொய்யான தகவல்களைக் கூறி மாணவிகளை போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மீது கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை சுப்ரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், குருசுகுப்பம் அரசு மகளிர் பள்ளிக்குச் சென்றனர். அப்போது, அங்குள்ள மாணவிகளுக்கும், இந்தப் பள்ளி மாணவிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, தகவலறிந்த பெற்றோர்கள் வகுப்பு அறைகளுக்கு சென்றபோது, மூடப்பட்டு இருந்ததால் வகுப்பு அறை கதவுகள் மற்றும் ஜன்னல்களை தட்டி திறக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பெற்றோர்கள் கோஷம் எழுப்பியதால் பதற்றம் உருவானது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த முத்தியால்பேட்டை போலீஸார், இரு பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்களை சமாதானம் செய்தனர். பின்பு சுப்பிரமணிய பாரதி மாணவிகளை, அவர்களது பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குருசுக்குப்பம் அரசுப் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டது.
தகவல் அறிந்து வந்த அமைச்சர் க.லட்சுமி நாராயணன் அங்கு வந்து பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தினார். கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவிகளிடம் விசாரித்தார். தேவையின்றி ஆசிரியர்கள், மாணவிகள் பிரச்சனை செய்யக் கூடாது என எச்சரித்தார்.