மதுரை பாலமேடு தனியார் கல்குவாரியில் முறையான பாதுகாப்பு வேலிகள் அமைக்காததால் அங்குள்ள மழைநீர் குட்டையில் குளிக்கசென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
மதுரை பாலமேடு வடக்குதெருவை சேர்ந்தவர் மலைச்சாமி (60) கூலி தொழிலாளி. இவர் தினமும் அருகிலுள்ள தனியார் கல்குவாரியில் உள்ள மழைநீர் குட்டையில் குளிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் இன்றும் குளிப்பதற்காக சென்ற மலைசாமி நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது குவாரி தண்ணீர் குட்டையில் பிணமாக மிதப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த பாலமேடு போலீசார் மலைச்சாமி உயிரிழந்த காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளை சுற்றி முறையான பதுகாப்பு வேலிகள் அமைப்பதில்லை. இதானால் இப்பகுதியில் செல்லும் பள்ளி சிறுவர்கள், முதியவர்கள், கால்நடைகள் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.