சத்தியமூர்த்திபவனில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்வு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்ற வாக்குபதிவில் 662 பேர் வாக்களித்தனர். மொத்தமாக 93 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப் பெட்டிகள் சீலிடப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் நேற்று நாடு முழுவதும் அந்தந்த மாநில தலைமை காங்கிரஸ் அலுவலங்களில் நடைபெற்றது. தேசிய அளவில் 9000க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள். தமிழகத்தில் மூத்த தலைவர்கள் எம்பி, எம்எல்ஏக்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 711 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி அளவில் நிறைவடைந்தது. வாக்குப்பதிவுக்காக சத்தியமூர்த்திபவன் கூட்ட அரங்கில் 4 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 711 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்கு சீட்டில் முதல் பெயராக மல்லிகார்ஜூன கார்கே பெயர் ஆங்கிலத்திலும், இந்தியிலும் அச்சிடப்பட்டிருந்தது. 2வது பெயராக சசி தரூர் பெயர் இருந்தது.

வாக்குச்சீட்டின் அடியில் எந்த மாநிலம், வாக்காளர் பெயர், வரிசை எண், இடம் ஆகிய விபரங்கள் பூர்த்தி செய்தனர். வாக்களிக்க வந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் பெயருக்கு நேராக கையெழுத்து போட்ட பின்னர் அவர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது. ரகசிய முறையில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இருவர் மட்டுமே தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் வாக்காளர்கள் டிக் செய்து வாக்குப்பெட்டியில் போட்டனர். வாக்களித்த பின்னர் மற்றொரு கதவு வழியாக வெளியே சென்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர் மற்றும் எம்பிக்கள் செல்லக்குமார், விஜய் வசந்த், கார்த்திக் சிதம்பரம், எம்எல்ஏக்கள் செல்வபெருந்தகை, பழனி நாடார், அசன் மவுலானா, துரை சந்திரசேகரன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஏ.வாசு, ரங்கபாஷ்யம், ஆலங்குளம் காமராஜ், செங்கம் குமார் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தமிழகத்தில் வாக்களிக்க தகுதியான 711 பேரில் 662 பேர் வாக்களித்தனர். இது 93 சதவீத வாக்குப்பதிவு ஆகும். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டியின் மேல் பகுதி சீலிடப்பட்டு, அதில் தேர்தல் அதிகாரிகள் கையொப்பமிட்டனர். பின்னர் நேற்றிரவு டெல்லிக்கு விமானம் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. இந்த வாக்குகள் உட்பட அனைத்து மாநில வாக்குகளும் டெல்லியில் நாளை எண்ணப்பட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் அறிவிக்கப்படுகிறார்.

சத்தியமூர்த்திபவனில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், சசி தரூருக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் தலைமையில் அவரது ஆதரவாளர்களும், மற்றொரு பகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் மூத்த தலைவர்கள் ஆதரவாளர்களும் அமர்ந்திருந்தனர். வாக்குப்பதிவு முடியும் வரை இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர். கடந்த கால காங்கிரஸ் வரலாற்றில் இதுபோன்ற சூழ்நிலைகளில் தகராறு வெடிப்பது சகஜமான ஒன்றாக இருக்கும். ஆனால் நேற்று இரு துருவங்களும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Translate »
error: Content is protected !!