எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து கோவையில் எல்ஐசி ஊழியர்கள் 2 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடுத்தகட்டமாக பாலிசிதாரர்கள், எல்.ஐ.சி., ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் ஆகியோருக்கான பங்கு விற்பனை இன்று தொடங்கி வரும் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை அறிவிப்பிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து கோவையிலும் திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இரண்டு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய கூடாது எனவும் மத்திய அரசின்
நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு இரண்டு மணி நேர வெளிநடப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். கோவை மாநகரில் எட்டு இடங்களில் 11 மணி முதல் 1 மணி வரை இந்த போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.