ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்படுத்தியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டை நடத்தியபோது, மீர்ஹமா என்ற பகுதியில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினான். துரிதமாக செயல்பட்ட பாதுகாப்புப் படையினர் உடனடியாக பதிலடி கொடுத்தனர், இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதேபோல் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஷாஹாபாத் டோரு பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இரு என்கவுன்டரில் மொத்தம் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இதில் 2 பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது, பாதுகாப்பு படை வீரர்கள் சிலர் பலத்த காயம் அடைந்தனர். என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் பயன்படுத்திய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜய்குமார் கூறினார்.