முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படும் என தமிழக நீர் வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டுவதற்கு முன்னதாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் குறிப்பாக அதிமுக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. அதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “பருவ மழை காலத்தில், குறிப்பாக வெள்ள காலங்களில், காலமுறைப்படி வரும் வெள்ள நீரை தேக்கி வைத்து முறைப்படுத்துவதற்கு ஏதுவாக, அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து, அணையின் நீர்மட்டத்தை முறைப்படுத்துவதற்கான மாதவாரியான நீர்மட்ட அட்டவணைப்படி மத்திய நீர்வளக்குழு தீர்மானித்தபடியே திறக்கப்பட்டதாக விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய நீர்வளக்குழு ஒப்புதல் அளித்த மாதவாரியான நீர்மட்ட அட்டவணைப்படி அணையில் இன்று 30.11.2021 காலை 142 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது.அணைக்கு அதிகமாக நீர்வரத்து இருக்கும் நாட்களில், நிலையான வழிக்காட்டுதலின்படி சம்பந்தப்பட்ட கேரள அதிகாரிகளுக்கு முன்னரே தெரியப்படுத்திய பின்னரே, அணையின் மதகுகள் திறக்கப்பட்டு படிப்படியாக நீர் வெளியேற்றப்படுவதாக தெரிவித்துள்ளார். 07.05.2014–ல் உச்சநீதிமன்றம் 142 அடி வரை தேக்கலாம் என ஆணையிட்ட பின்னர், நான்காவது முறையாக இன்று 30.11.2021, அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி அணையினை பலப்படுத்த மீதமுள்ள பணிகள் முடித்த பின்னர், அணையின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம். இதற்கு சில இடையூறு இருந்தாலும், அப்பணிகளை முடிக்க, தொடர்ந்து எல்லாவிதமான முயற்சிகளும் நடவடிக்கைகளும் முதலமைச்சருடன் கலந்தாலோசித்து எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.