கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகளின் விளைநிலத்தை ஏலம் விடுவதற்கு தடை விதிக்கும் மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில், கடனை திருப்பிச் செலுத்தாததால் விவசாய நிலங்களை வங்கிகள் ஏலம் விடுவது அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை அளித்தும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க கெலாட் அரசு தவறி விட்டதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், 5 ஏக்கருக்கு உட்பட்ட, கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகளின் விளைநிலங்களை ஏலம் விடுவதற்கு, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தடை விதித்துள்ளார். இது குறித்த மசோதா ராஜஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருப்பதாக நம்புவதாகவும் கூறினார்.