நாளை துவங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதனால், கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வருகிற 5ம் தேதி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழையும், மேலும் வருகிற 6ம் தேதி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.