தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையினால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இந்த ஆண்டில் 3வது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் முழுக்கொள்ளளவை எட்டிய போது 58ம் கால்வாயிலும், உபரி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்ளாக மழை பெய்யாததால், வைகை அணையில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டதால், வைகை அணை நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 2,144 கனஅடியாக குறைந்ததுள்ளது. இதன் காரணமாக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரில் 1600 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காகவும், 58ம் கால்வாயில் வினாடிக்கு 150 கனஅடி தண்ணீர் என பிரித்து திறந்துவிடப்படுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கான நீர்வரத்து மேலும் சரியும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆகையால் நீர்வரத்து குறைந்தாலும் வைகை அணையின் நீர்மட்டத்தை 69 அடியில் நிறுத்த பொதுப்பணித்துறையினரால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.