சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் தற்காலிக பணியாளர்களை தற்போது 1400 ஆக குறைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
சென்னையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில், காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிய மாநகர் முழுவதும் 12000 தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தபட்டனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று ஜூலை மாதத்தில் கணிசமாக குறைந்த நிலையில் 12 ஆயிரமாக இருந்த ஊழியர்களை 5 ஆயிரத்து 527ஆக குறைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. சென்னையில் தற்போது கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் 5527 ஆக இருந்த பணியாளர்களை 1400 ஆக மாநகராட்சி குறைத்துள்ளது.
குறிப்பாக இந்த பணியாளர்களை கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் தடுப்பூசி செலுத்துவதற்கும், ஆர்டிபிசிஆர் பரிசோதனையை செயலியில் பதிவேற்றம் செய்வதற்கும், பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.