தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1949ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு தனியார் வனங்கள் பாதுகாப்பு சட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவின் அனுமதி இல்லாமல் வனப்பகுதி நிலங்களின் உரிமையாளர்கள், அந்த நிலத்தை வேறு யாருக்கும் விற்கவோ, குத்தகைக்கு விடவோக்கூடாது.
இந்த நிலையில், 2011ல் இந்த சட்டத்தில் புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு திருத்தம் கொண்டு வரபட்டது. அதன்படி, குழுவின் முன் அனுமதியோடு வன நிலங்களின் உரிமையாளர்கள், அதை வேறு ஒருவருக்கு விற்கலாம் என்றும், அதனை வாங்குபவர்கள் அந்த வனப்பகுதியை தானே வைத்து கொள்வதற்கு அரசுக்கோ, குழுவுக்கோ விண்ணப்பம் அளித்து அனுமதி பெறுவதற்கு திருத்தம் செய்யபட்டது. இதனை முருகவேல் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 6 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.