சென்னையில் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், கோடை காலத்தில் தங்குதடையின்றி தண்ணீர் விநியோகிக்கப்படும் என குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடந்த மாதம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பின. பல இடங்களில் மழைவெள்ளம் சூழ்ந்ததால், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை , வீராணம் ஆகிய ஏரிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக நீர் இருப்பு உள்ளது. இதனால் கோடைகாலம் உட்பட அடுத்த 11 மாதங்கள் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்க முடியும் என குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.