சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்ட பணிகளுக்காக ஆசிய கட்டமைப்பு வங்கி, 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் 2-ம் கட்ட திட்டம், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை, மாதவரம் முதல் சிறுசேரி வரை என 3 வழித்தடங்களில் இந்த திடட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இத்திட்டத்திற்கு 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கடன் வழங்க, சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை வங்கியின் முதலீட்டு நடவடிக்கைகளுக்கான துணைத்தலைவர் டி.ஜே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இவர், சமீபத்தில் சென்னைக்கு வந்து மெட்ரோ ரெயில் பணிகளை ஆய்வு செய்திருந்தார் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.