குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் விழா நடந்தது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.
அப்போது அதிகாரிகள் சிலர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த பத்திரிக்கையாளர் ஒருவர், “தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது ஏன் எழுந்து நிற்கவில்லை?” என்று கேட்டார். அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. என்றார்.
வங்கி அதிகாரிகளின் தவறான நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி இன்று காலை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து வங்கி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்தார்.