ஸ்ரீபெரும்புதூர் அருகே தகராறை தடுக்கச் சென்ற இளைஞரை அடித்து கொலை செய்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (33). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (27) ஆகிய இருவரும் கிராமத்திற்கு வெளிப்புறத்தில் நேற்று இரவு மது அருந்திய போது வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் சண்டையிட்டுக் கொண்டு வீட்டிற்கு சென்ற நிலையில் தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது உறவினரான பிரபாகரன் அவரது தம்பி சிவக்குமார் ஆகிய மூவரும் சந்திரசேகரன் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டி சண்டையிட்டு உள்ளனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இதனை கண்ட சந்திரசேகரின் அண்டை வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சுரேஷ் (38). கைகலப்பில் ஈடுபட்டவர்களை தடுத்து கலைந்து செல்ல அறிவுறுத்தி உள்ளார். இதனால் மது போதையில் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகளான சிவகுமார்,பிரபாகரன் ஆகிய மூவரும் சேர்ந்து சுரேஷை பலமாக தாக்கி உள்ளனர். இதில் தலை மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயமுற்று ரத்த வெள்ளத்தில் சுரேஷ் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை அழைத்து சென்று ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் அதிர்ச்சியுற்றனர். இதனால் அச்சமடைந்த தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட மூவரும் காவல்துறைக்கு பயந்து தலைமறைவாகினர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகாமையில் தலைமறைவாக இருந்த மூவரையும் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் மூவரையும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.